கொரோனா வைரஸ் என்ற கொடூர அரக்கனின் பிடியில் உலகம்

அகிலத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா

சீனாவின் உகான் நகரில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், தற்போது அகிலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் தனது கோரமுகத்தை காட்டிவரும் இந்த வைரசால் அன்றாடம் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகின்றனர். கொரோனாவின் கொந்தளிப்பால் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரசால் மாண்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அரசன் முதல் ஆண்டி வரை யாரையும் பாகுபாடு பார்க்காமல் பதம் பார்த்து வருகிறது கொரோனா. இன, மத, மொழி பேதமில்லாமல் வறியவர் முதல் வசதிபடைத்தவர் வரை கொரோனாவின் சீற்றத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். அரசகுடும்பத்தினர், ஆகச்சிறந்த அரசியல் ஆளுமைகள், திரைப்பட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என்று பல்துறை பிரபலங்களும் கொரோனாவின் கோரப்பிடியில் அகப்பட்டுக்கொண்டுள்ளனர். சில முக்கிய நபர்கள் பலியாகியும் உள்ளனர். அவர்களைப் பற்றி….
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் பேரிழப்புகளை சந்தித்துவரும் பகுதியாக ஐரோப்பிய கண்டம் உள்ளது. இந்த வைரசுக்கு இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் என்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகள் நடுநடுங்கி வருகின்றன. ஐரோப்பிய கண்டத்தின் தாதாவான ஒருங்கிணைந்த இங்கிலாந்து ராஜ்ஜியமும் இதற்கு விதி விலக்கல்ல. குறிப்பாக இங்கிலாந்து அரசகுடும்பமும் கொரோனாவின் கொடூரப் பார்வையிலிருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. பக்கிங்காம் அரண்மனை ஊழியருக்கு ஏற்கனவே வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கும் கொரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 71 வயதான வேல்ஸ் இளவரசான இவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
சார்லஸ் மனைவி கேமிலாவும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளார். இங்கிலாந்து மகாராணி 2‡ம் எலிசபெத்தும், அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் வைரஸ் அச்சத்தால் அவர்களே தங்களை சுயமாக தனிமைப்படுத்தி பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சார்லஸ் தற்போது குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொனாக்கோ இளவரசர் 2‡ம் ஆல்பர்ட்
செல்வந்தர்கள் செறிந்து வாழும் மொனாக்கோ நாட்டின் ஆட்சியாளரும், இளவரசருமான 2ம் ஆல்பர்ட்டும் (வயது 62) கொரோனாவால் பாதிக்கப்பட்டு அந்நாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 10ந் தேதி லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லசோடு மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட்டும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இருவரும் எதிரெதிர் வரிசையில் அமர்ந்திருந்தனர். தற்போது 2 இளவரசர்களுக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
நாடுகளின் ஆளுமைகளில் கொரோனாபாதிப்புக்கு ஆளாகி இருக்கும் முதல் நபர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆவார். 55 வயதான இவர் வைரசால் பாதிக்கப்படலாம் என்று ஏற்கனவே ஆருடம் சொல்லப்பட்ட நிலையில் தற்போது அது பலித்துள்ளது. கடந்த வாரத்தில் ஜான்சனுக்கு கொரானா பாதிப்பு உறுதியானது. இதன்பிறகு 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள இவர், வீட்டிலிருந்தபடியே காணொலி காட்சி மூலம் இங்கிலாந்து அரசின் கொரோனா தடுப்பு பணிகளை கவனித்து வருகிறார்.
இங்கிலாந்து பிரதமர் மட்டுமின்றி அந்நாட்டின் சுகாதார மந்திரி நாடின் டோரிஸ் (62) சுகாதார செயலாளர் மேட் யஹன்ஹாக்(41) ஆகியோரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் சுகாதாரத் துறையையே கொரோனா பிடித்திருப்பது அவலத்திலும் அவலம்.
கனடா, ஸ்பெயின் பிரதமர்களின் மனைவி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி ட்ரூடோ (44) கடந்த 12‡ந்தேதி கொரோனா பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டார். இவரோடு கணவர் ட்ரூடோ, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் தங்களை சமூகத்தில் இருந்து விலக்கிக் கொண்டனர். சுமார் 15 நாட்கள் வீட்டிலேயே இருந்தனர். இந்தநிலையில், பூரண குணமடைந்துவிட்டதாகவும், தனது உடல்நலன் தேற விரும்பியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சோபி ட்ரூடோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோசான்செசின் மனைவி பெகோனா ஹோமஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
மற்ற அரசியல் ஆளுமைகள்
உலக அளவில் ஸ்பெயின் துணை பிரதமர் கார்மென் கால்வோ, அந்நாட்டின் சமத்துவத்துறை மந்திரி ஐரீன் மோன்டரா, ஆஸ்திரேலிய உள்துறை மந்திரி பீட்டர் டட்டன், ஈரான் துணை அதிபர் எசக் ஜஹாங்கிரி, அந்நாட்டின் சுற்றுலா மந்திரி அலி அஸ்கர் மவுனேசன், தொழில் மந்திரி ரீசா ரஹமானி, ஈரான் துணை சுகாதார மந்திரி இராஜ் ஹரிர்சி, அமெரிக்க செனட்டர் ரேனல் பால், மியாமி நகர மேயர் பிரான்சிஸ் சுயரேஸ் உள்ளிட்ட பல அரசியல் ஆளுமைகளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளனர்.
திரையுலக பிரபலங்கள்
திரையுலக பிரபலங்களும் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர். 2 முறை ஆஸ்கார் விருதை அள்ளியவரும், டாவின்சி கோட், ஏஞ்சல் அண்ட் டெமான்ஸ் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான பிரபல அமெரிக்க நடிகர் டாம் ஹாங்ஸுக்கு (63) கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஹாங்ஸ் மட்டுமின்றி அவரது மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான ரீட்டா வில்சனும்(63) இந்த வைரசிடம் அகப்பட்டார், 14 நாட்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இந்த தம்பதியினர் தற்போது முழுமையாக குணமடைந்து அமெரிக்கா திரும்பி உள்ளனர்.
பாஸ்ட் அண்ட் பியுரியஸ், தி டார்க் டவர், தோர், அவெஞ்சர்ஸ் ஆகிய பிரமாண்ட ஹாலிவுட் படங்களில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திய இங்கிலாந்து புகழ் இட்ரிஸ் எல்பாவும் (47) இந்த வைரசால் பாதிப்படைந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். இவரது மனைவி சப்ரீனா எல்பாவுக்கும் நோய் தொற்று உறுதியான நிலையில், தம்பதியர் தனிமையை அனுபவித்து வருகின்றனர்.
யஹல்பாய், இன்சர்ஜென்ட் பட புகழ் டேனியல் டே கிம் (51) ஹாலிவுட்டின் சிறப்புமிக்க சீரியசான கேம் ஆப் திரோனில் நடித்த நார்வே நடிகர் கிரிஸ்டோபர் ஹிவ்ஜு(41), இங்கிலாந்து நடிகை இந்திரா வர்மா (46), அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ் டென் (68), இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் (42) என்று திரையுலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீள்கிறது.
விளையாட்டு வீரர்கள்
கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட விளையாட்டு வீரர்களையும் கொரோனா விட்டுவிடவில்லை. உலகம் முழுவதும் பரவி டோக்கியோ ஒலிம்பிக் உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகளை ரத்து செய்து ஸ்தம்பிக்க செய்துள்ள இந்த வைரசின் பிடியில் முன்னணி விளையாட்டு வீரர்கள் பலரும் மாட்டிக்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற என்.பி.ஏ. கூடைப்பந்து லீக்கில் விளையாடிவரும் கெவின் டூரன்ட் (31), ரூடி கோபர்ட் (27), டோனாவான் மிட்செல் (23) உள்ளிட்ட ஆறடி உயர ஜாம்பவான்களே கொரோனாவின் கொதிப்பில் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்பந்து உலகில் வெறும் 19 வயதான இங்கிலாந்து அணியின் இளம் வீரர் காலும் ஹட்சன் ஓடாய், அர்ஜெண்டினா, இத்தாலி நாட்டின் கால்பந்து நட்சத்திர வீரர்களான பல்லோ டிபாலா (26), டேனியலி ரொஹானி(25), அமெரிக்க கால்பந்து அணியின் பயிற்சியாளர் சீன் பேடன் (56), ஸ்பெயின் பயிற்சியாளர் மைக்கேல் அர்டீடா(38) ஆகியோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களில் யாரும் இதுவரை பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவராத நிலையில், ஆஸ்திரேலிய புயல் கேன் ரிச்சர்ட்சன் வைரஸ் அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பலியான பிரபலங்கள்
கொரோனா பாதிப்பால் ஸ்பெயின் அரச குடும்பத்தில் உயிரிழப்பும் நேரிட்டது. ஸ்பெயின் இளவரசி மரிய தெசா(86), இந்த வைரசின் கோர பிடியில் சிக்கி உயிரிழந்தார். அரபு நாடுகளில் அதிகம் பாதிப்புக்குள்ளான ஈரானில், பெண் எம்.பி. பாத்தமே ரஹ்பர் (55) இந்த வைரஸ் பாதிப்பில் பலியான குறிப்பிடத்தக்க நபர் ஆவார்.
ஒட்டு மொத்தமாக சாமானியன் முதல் சக்ரவர்த்திவரை கொரோனா வைரஸ் என்ற கொடூர அரக்கனின் பிடியில் அல்லோகலப்பட்டு வருகின்றனர்.

Leave A Reply